Wednesday, April 29, 2009

ஆதியின் நிழல்


யாருமறியாத
கருக்கலில்
முகமிழந்த நாம்,
சொல்லப்படாத
வார்த்தைகளுக்காய்
மெளனம் பகிர்ந்தோம்.
அடைபட்ட துயிலின்
முற்றங்களில்
நிலாவின் ஒளியருந்தி,
உன்னில் நானும்
என்னில் நீயும்
மொட்டவிழ்ந்த
அன்பின் நீர் தழும்பலில்,
கண்களில் பூத்தது
ஒளியின் பிரவாகம்.

நம் கனவுகளின்
ஏகாந்த பிரதிமைகளை
ஏற்காத உதிரச்சாயல்களின்
மனச்சுழிவுகளில்,
சோபையிழந்து
நீரின் எதிரெதிர்க் கரைகளில்
வேரறுந்தோம்.

உன் விவாதங்களின்
பொய்பிம்பகுகைகளில்
ஆதிகால மனுஷியாய்,
மொழியடங்கய
மெளனத்தின் குரல்வளை
நீண்டு மெலிந்ததண்டுகளாய்.

என்றேனும்
நீ உணரக் கூடும்
நம் சாயலில் ஒளிரும்
பூவின் இதழ் தொட்டு
பிரகாசிக்கும்
நிலாத்துண்டங்களை!

Monday, April 27, 2009

நடமாடும் வெதுப்பகம்


தானியம் நிறைந்த

மச்சுவீட்டில்

காலைவேளை

சந்திப்புகளில் 

நுரைக்கக் கிடைத்தது

கருப்பட்டிக்காப்பி.

முகம் தெரியாத

மாலைத் தீற்றல்களில் 

அப்பாவுக்குத் தெரியாமல்

கூடி அருந்தின

தேநீர் இனித்தது

திண்ணைக்கடைகளில்

நட்பின் பாலோடு.

நீள் சாலையின் முடிவில்

குறிப்பிட்ட அந்த

தேநீர் கபேதான் 

இலக்கியம் வளர்த்தது

அன்றைய பொழுதின் 

பசி தீர்த்த

நுரை ததும்பும்

நாயரின் டீ.

இரவுப்பொழுதின்

நீண்ட பயணங்களில் 

அதிரும் கானாபாடல்களின் 

பொருள் விளங்குமுன் 

கூடி அருந்தினோம் 

ஒரே பேருந்தில் 

பயணிக்கும் பொருட்டு .

மழைக்கால பயணத்தின் 

குளிரூட்டும் சாரல்களில் 

ஆவி பறக்கும் அனலிடை 

சுக்கின் மணம் சுமந்து 

சுறுசுறுப்பாய் இயங்கும் 

காளான் குடை 

வெதுப்பகம்.

பணியின் நலன் கருதி

குவிக்கப்பட்ட 

அரசு ஆணைகளின் 

பிரதிகளின் நடுவே 

தேடி வருகறது தேநீர்,

இன்றே கையொப்பம் வேண்டி.

இப்போதெல்லாம் 

நடைபாதையினூடே

அவசர கதியில்

மிதிவண்டியில் பயணிக்கும் 

வெதுப்பகத்தில் 

அருந்துகிறோம் தேநீர் 

இணையதள முகவரி 

கைமாறும் நிமிடங்களில்.

கசப்பின் சுவையூடே 

விவாகப் பத்திரிகையுடனான 

அவளின் இறுதி சந்திப்பில் 

நீண்ட கனவு முடிவுற்றதில் 

வார்த்தைகளற்ற மெளனியாய் 

உலகின் முற்று பெறாத 

புள்ளியாய் நான்.

நடமாடும் வெதுப்பகம்

Monday, April 13, 2009

மரவீடுகளின் ஜன்னல்.


மரத்தின்

கூடுகைக்கீழ்

குவிந்துக்கிடக்கும்

தர்பூசணிகளில்

ஒரு துண்டையும்

சுவைக்க இயலாத

காகிதம் சேகரிக்கும்

சிறுவனின்...

நிராசை பற்றி.

வேகங்களில் விரையும் 

அசையா நகரத்தின்

பயணக் குறிப்புகளை

நரம்புகள் தகிக்கும் 

இலை நறுக்குகளில்

காம்புகள் அவிழும்

நொடிகளுக்குள்

பதிவு செய்தது கானல்.

காதறுந்த

பாதஅணிகளின்

கடைவிரித்தலில்

தோல்துளைக்கும்

வெம்மை கடந்து

பரதன் போல்

வீற்றிருந்தான்

பாதுகைகள் பற்றி

வாழ்வன் பசியூடே.

குளிரூட்டப்பட்ட

வண்ணம் பொதிந்த

பனிக் கூழ்

விற்பவனுக்கும்

தாயின் கைபிடித்த

குழந்தைக்கும் 

இடையே கரைகிறது

சங்கேத மொழியின் 

அழைப்பின் ஜில்லிப்பு.

அலகால் கொத்தியுண்ண  

இயலாத அரிசியின்

சீரான ஒழுகலை

தடுக்க இயலாத 

இறக்கையமர்த்தி 

விரையும் வாகனங்களில்

பயணிக்கிறது பசி.

கற்பனைப் பசுமையை 

மெழுகு வண்ணங்களின்

தீற்றலில் கண்டது,

தென்னைமரத்தையே 

கைகளில் தாங்கும்

பாவனையுடன் 

இளநீர் அருந்துகிறது 

மழலையின் கண்கள்.

ஆள் அரவமற்ற 

தெரு முனைச்சந்தை

நேருக்கு நேர் 

கடந்த பின்னும்

தர இயலாத 

கணங்களின் வேர்வையில்

கசிந்தொழுகும்

முதல் காதல் கடிதமும் 

அவளின் ஆடைக்கேற்ற

ரோஜாவின் வாசமும்.

கரிய சிறகுகளை

தீய்ந்தொழிக்கும்

தார்ச்சாலையின் 

நீள் பரப்பில் 

பிராவகமாய்

கானல் நீர்.

வறண்ட அலகுகளில்

நனைந்தூறும் 

ஆளரவமற்ற வளைவுகளில் 

நீர்க்குழாய்களின் 

சொட்டு நீர்க்கசியல்.

அலகுகள் கீறிச்செல்லும் 

நினைவுகளுக்கப்பால்

காதலின் பசியோடு 

அசையும் மரவீட்டின் 

கிளையின் மாடங்களில் 

தலை சாய்த்துப்பார்க்காத 

அவளின் ஒற்றைப்பார்வைக்காய்.

வால் நட்சத்திரம் !


கருவறை வாசம் முடிந்து

கண் திறந்ததும் 

நுழைந்தது இது .

என் இமைக்கூட்டில

இருப்பது தெரியாமல் 

கனவுலகப் புள்ளிகளில் 

பால் மணம் மாறாமல் 

புன்னகை புரிந்தேன் .

கடவுள் பேசுகிறார் 

என்றார் சிலர் 

தத்தி தத்தி 

முற்றம் நடந்த நான் 

இலை நழுவும் 

ஒளிக்கற்றையை 

கையில் பற்ற 

எத்தனித்தேன் 

அகிலத்தின் அணுக்கள் 

குழைந்தோடும் 

ஓலைக்கீற்றின் ஓட்டைவழி 

இறுகப் பற்றியும் 

பிடிக்க இயலாத 

ஒளிவட்டம் தேடி 

அரும்பும் இளமையில் 

எதிர்படுபவர் கண்களில் 

தேடினேன் அதை .

அறிமுகம் இல்லாத

முகத்தின் கண்களில்

மிளிர்ந்தது அது

அதுவே எனதென்று

பற்றி இழுத்து

எனதாக்க முயற்சித்தேன்

வண்ண வண்ண கனவுலகம் காட்டி

எம்பி குதித்த போது

உடைந்து நிறமிழந்து

காற்றுக்குமிழ் போலே 

என் கனவின் மேல்அதிருப்தியுற்று

இழைந்தோடும் அதை

வால்முளைத்து

நீந்தக் கண்டேன்

வேடிக்கை பார்த்த

நீள்வட்ட  நீர் பரப்பில

நீ வேண்டாம் என 

போக்கு காட்டி 

என் சாயலை ஒத்த

கண்கள் விழிப்படிமமானது,

புதிய கனவொன்றின் 

ஒளிபற்றி.

இனி அது நமதல்ல என  

பெருமூச்செய்திய தருணத்தில் 

வழக்கத்தின் காரணமாய் 

அருவமாய் இமைக்குள் 

சிறகுகள் மடித்து 

மணலாய் நெருடிற்று 

கண்ணின் கருவட்டம் 

நீரின் நிழலில் 

அதன் பின்னே அலைந்தது .

பேச மொழியின்றி 

பசிய நீரின் ஆழம் துளைத்து 

ஒளித்தூண்டிலின் 

கரைவந்து 

அது எனதல்லவென 

மெய்யுணர்ந்தபோது 

நானே நட்சத்திர ஒளியானேன் 

உடம்பொடு மெய் நீங்கி.

 

Friday, April 10, 2009

பிரிவின் கதை சொல்லி !


இதுதான்

நான் வளர்ந்த வீடு

புன்னகையோடு

ஆமோதி்த்தாய்

உன் கண்கள்

மினுங்கியது

திராட்சைப்பழங்களாய்

வீட்டின் வெளியெங்கும்

மி்தந்த என் வாசம்

உன் நாசியின்    துளைப்பற்றி

நாம் சல்லாபித்தோம்

நிலாவொளியின் குளுமையில்

உனக்கும் சில வார்த்தைகள்

மீ்த்மிருந்தது 

மெளனத்தின் மீது.

மாவிலை உரசும்

மாடியின் நிழலில்

நட்சத்திர இரவுகளின்

தாயுடன் களித்த 

பால்ய நாட்களை

நினைவூட்டினாய்

உனக்குப்பிடித்த

உன் மாடியின் 

படிக்கட்டுகளை

தாவிக்கடந்தோம்

இரண்டிரண்டாய்

ஒரு விடியலுக்குள்

நாம் பிரிக்கப்பட்டோம்

ஒரு வாரமாய்க்காணாத

என்னைக் கண்டுபிடித்து

பிணைத்தார்கள் சங்கிலியால்

ஆனாலும் நீ பாலூட்டுவாய்

நம் குழந்தைகளுக்கு

பிரிவின் ஈர

கதைகள்  சொல்லி.