Wednesday, May 27, 2009

ஒரு நாள் இனிவரும்....


நீ என உறுதிப்படுத்த 

தேவைப்பட்டது 

உன் இறப்பிற்கான சான்று.

நீயில்லையென 

நம்ப மறுக்கின்றன 

சுதந்திரத்திற்கான 

வேள்வியின் கண்கள.

வல்லூறுகளின்

மேற்பார்வையில் 

இனவெறியை   

கட்டவிழ்த்து 

வன்புணர்ச்சியில் 

வாகை சூடியது 

ஓநாய் கூட்டம்.

பாதுகாப்பு அரணில் 

தூங்கும் எமை 

எரியூட்டுபவனோடு 

வாழ இயலுமோ 

உடன்படிக்கை இட்டு.

மௌன சாட்சியாய் 

உறையும் எம் விழிகளில் 

உயிருடன் 

வாழ்கிறாய் நீ.

யாரோ நகர்த்தும் 

சூதாட்டக் காய்களில

துறைமுகங்கள் விற்று

சிம்மாசனம் பிடித்த

அவர்களின் தலை

வெட்டப்படும் ஒரு நாள். 

Tuesday, May 26, 2009

காற்று வெளியிடை....


கருக்கு பட்டயம்சூழ்

குருத்தோலைக்கிடையே 

மரப்பாச்சிகளைப்போல் 

முகம்காட்டினோம், 

விடலைப் பெண்ணின்

எலும்புகள் கிளைக்கும்

பருவம்போல் முகிழ்த்தன

பச்சை மார்பகங்கள்

வானம் அளைந்து

வீழும் நட்சத்திரங்களை

இலைகளால் உயிர்த்தோம்

மூத்த ஓலைகள்

வீழும்போது

வயதின் வரியை

எழுதி உதிர்ந்தன

சுண்ணம் பூசிய

பானைகள் பொருத்தி

குருத்துகள் சீவி

கள் சேர்க்கும்

சொள்ளமுத்துநாடார்

எங்கள் ராஜகுமாரன்

பாம்படம் அணிந்த

நகோமிபாட்டியின

நினைவுகள் சுமந்த 

எங்கள் தண்டுவடம்

சுவாசித்தன

காற்றுவெளியிடை

காதலின்

ஈரவரிகளை..! 

Friday, May 8, 2009

இரவு பகல் கடந்து


இமைகளை அழுத்தியது 
நகரத்தின் வெம்மை, 
சேர்ப்பிக்க வேண்டியதை 
சேர்த்துவிட்டு 
இமைமூட வேண்டும், 
வாகனம் விரையாத 
சாலையின் ஓரத்தில். 
கானல் காற்றின் 
சாட்டை சொடுக்கி 
பயணித்தேன் 
புரவியின் விரைவாய் 
இரு சக்கர வாகனத்தில். 
விற்காத பொருட்கள் 
திறக்காத கதவுகளுக்கானது. 
சந்தேகிக்கும் பார்வைகளினூடே 
மறுக்கப்படுகிறது, 
தாகம் தீர்க்கும் நீரும் 
இலவசமாகத் தரும் எதுவும். 
பேரம் நடக்கிறது 
படியாத தொகைகளில் 
ஜன்னல்களின் கம்பிகளூடே 
ஆண்களின் அரவமற்ற வீடுகளில் 
இரவுபகல் திரைவிலக்கி 
பயணிக்கிறோம் 
வியாபாரம் முடியும்வரை...

விருட்சம்


வானளாவியது 
வீட்டுக்குள் அடங்கியது 
கிளைத்த கிளைகளை 
வெட்டி வெட்டி. 

கூழாங்கல்லில் 
வேர்பாவி 
வளர்ந்தது மரம், 
சொட்டு நீர் பாசனம். 

கட்ட இயலாத 
விழுதகளில் ஆடியது, 
கடவுளின் மரஊஞ்சல் 
பூஜை அறைகளில். 

ஊசிகள் பாய்ந்த 
தண்டுகள் வளர்ந்தது 
தொட்டிகள் உடைக்காமல் 
குட்டை ரக மரங்கள். 

அசோக மர 
பச்சை நிற பூச்சரம் பற்றி 
பம்பரக் காய்கள் பற்றி 
பாட்டியின் கதைகள். 

வானளாவிய 
விருட்சங்களின் விதை 
அரசின் இரகசிய 
குளிர் சாதனப் பெட்டிகளில் 
உயர் ரக ஒட்டு மரங்கள். 

ஓடும் விலங்கு 
பறக்கும் பறவை 
கணினியின் 
குறுந்தகடுகளில், 
அறிவியல் பாடம். 

கைகளில் சுமந்தபடி 
காட்டினாள் ஆசிரியை 
இதுதான் மரமென்று ,
போன்சாய் மரம். 

வீழும் கட்டிடங்களின் 
பூகம்ப உழவுக்காய் 
காத்திருந்தான் 
விதவிதமான 
விதைகளோடு 
கடவுளின் தூதன்...