Friday, May 8, 2009

விருட்சம்


வானளாவியது 
வீட்டுக்குள் அடங்கியது 
கிளைத்த கிளைகளை 
வெட்டி வெட்டி. 

கூழாங்கல்லில் 
வேர்பாவி 
வளர்ந்தது மரம், 
சொட்டு நீர் பாசனம். 

கட்ட இயலாத 
விழுதகளில் ஆடியது, 
கடவுளின் மரஊஞ்சல் 
பூஜை அறைகளில். 

ஊசிகள் பாய்ந்த 
தண்டுகள் வளர்ந்தது 
தொட்டிகள் உடைக்காமல் 
குட்டை ரக மரங்கள். 

அசோக மர 
பச்சை நிற பூச்சரம் பற்றி 
பம்பரக் காய்கள் பற்றி 
பாட்டியின் கதைகள். 

வானளாவிய 
விருட்சங்களின் விதை 
அரசின் இரகசிய 
குளிர் சாதனப் பெட்டிகளில் 
உயர் ரக ஒட்டு மரங்கள். 

ஓடும் விலங்கு 
பறக்கும் பறவை 
கணினியின் 
குறுந்தகடுகளில், 
அறிவியல் பாடம். 

கைகளில் சுமந்தபடி 
காட்டினாள் ஆசிரியை 
இதுதான் மரமென்று ,
போன்சாய் மரம். 

வீழும் கட்டிடங்களின் 
பூகம்ப உழவுக்காய் 
காத்திருந்தான் 
விதவிதமான 
விதைகளோடு 
கடவுளின் தூதன்...

No comments:

Post a Comment