Tuesday, March 24, 2009

சிறகுவிதை


சிறகுகள் தீய 
புகையும் நெருப்பினில் 
உயிர் பொசுக்கினாலும்
மீண்டும் வருவேன் 
ஃபீனிக்ஸ் பறவையாய்.

கனவுகள் தீய
கருக்கிப்போட்டாலும் 
கிளை துளிர்ப்பேன் 
வேர்களில் உயிர்த்து.

எரிந்து விழும் 
நட்ச்சத்ததிரங்களுக்கிடையே 
விடி வெள்ளியாய் 
வானில் முளைப்பேன்.

உலர்ந்து விழும் 
சருகுகளுக்கு 
பாடம் சொல்வோம்.,
மெய்ப்படும்வரை 
காண்போம் கனவுகள்.,

அதுவரை 
வீழ்ந்தாலும் 
விதைகளாய் வீழ்வோம்.

Monday, March 9, 2009

தாகத் தீ


தாகத் தீ

காத்திருந்து வாங்கினர் 
கொள்கலனடைந்த
வெடிக்கும் தீயை.

உரசலின் நெருப்பில்
தகித்த 
மூங்கில்காட்டுக்கு 
அவசியப்படவில்லை
சிக்கி முக்கி கல்..!

காலவெளி 
பெருநெருப்பை 
மூடிவைத்தனர் 
மூச்சுக்காற்றில்..!

அடுக்குமாடி குடியிருப்புகள்
ஆலாய் பறந்தன 
அசுரப் பசி தாகத்தில் 
 
பச்சைக் கீரையின் 
கொள்ளை விலையில் 
பசி தீர்த்தன 
கலோரி மாத்திரைகள் 

நீர்க் குழாயில் 
வழிகிறது 
வெள்ளை தங்கம்
 
நீர் வேண்டி 
கைபேசி வழியலறும்
தாகம் தோய்ந்த 
வீடுகளின் நாவுகள்..!

சூரியனைப் பிட்டு 
வெப்பம் விற்கும் 
அணுமின் மனிதன்.

பறக்கும் தட்டுகள்
கொள்ளையிடக்கூடும் 
நிலவிலுறையும் பனியை..

கிரகவாசல்தோறும் 
அழைப்புமணியழுத்த 
முண்டியடிக்கும் 
மனிதவிரல்களின்
ரேகை குவியல்.

மின்கலன் சுமந்த 
என்னிதயத்தில் 
வெட்டவெளியாய் 
பற்றி எரிந்தது 
தாகத்தின் தீ...!

விதிவெல்லும் 
அறிவால் 
உருவாக்கவியலாது 
நதிகளை..!



 



 

Saturday, March 7, 2009

கழுவிச் செல்லும் மழை


கழுவிச் செல்லும் மழை.

கழுகுகளின் மாமிச அலகுகளையும் 
அன்று பிறந்த 
அதன் குஞ்சுகளையும் 
காய்ந்த சுள்ளிகளின் 
திறந்த வெளி வீட்டையும் 
கழுவி செல்லும் மழை.

ஆடையுதிர்த்த மரங்களின் 
சருகுகளை 
தன் அமானுஷ்ய விரல்களால் 
களைந்து காற்றிலடித்து 
மரங்களின் முண்டுகள் தடவி
வழிந்தோடியது மழை 

வானைத் துளாவிய 
ஒற்றடை குச்சிகளின் 
நுனிகளெங்கும் 
ஒரே இரவில் 
பச்சை துளிர்களின் 
மருதாணிப் பதியல்.

மழைப் புள்ளிகளின் 
முத்த மழையில் 
ஆண்டுகளின் அழுக்கு 
கழுவப்பட்டு வீதியெங்கும் 
காலடி கோலங்கள்.

குழைய குழைய 
செம்மண்ணோடு 
மேகமழையில் 
சர்க்கரை பாகு.

கல்லுக்குள் புதைந்த 
தேரைகளின் காட்டில் மழை 
கல்யாண களையோடு 
இரவெல்லாம் கச்சேரி. 

ஓடி வந்த 
நீருக்கு வீட்டை
தந்து விட்டு 
திண்னையில் 
ஒண்டியிருக்கும்..
நானும் என் கவிதையும் 


சுதந்திரமே உன் விலை என்ன..?


நீ..
மூச்சுமுட்டி
அமிழ்ந்து போ..
தினம் தினம் 
கந்தக நெடியில் 
ஒருமுறையாவது 
சுதந்திரம் பற்றி பேசவிடு
என் அண்டைதேசமே..!

நீ அங்கே உயிருக்காய் 
பதுங்கு குழியில் 
பதுங்கும்போது 
நான் இங்கு 
நட்சத்திர ஓட்டலில் 
பீட்சா பற்றி 
யோசிக்க முடியவில்லை..!

தமிழ் பேசிய உதடுகள் 
உறித்தெடுக்கப்படும் என்றால்..,
உங்களின் சிம்மாசனம் 
தமிழனின் எலும்புகளால் 
அழகூட்டப்பட்ட 
பிணமேடு..!

நிர்வாணப் பிணங்கள் 
தமிழ் பேசிய 
பிணம் என்றால் 
கொத்தி தின்னும் கழுகுகளின் 
அலகுகளில் 
புத்தரின் போதனை எதற்கு..?

இனவெறியை 
பச்சயமாக்கிய 
சப்பாத்திக்கள்ளிகளின்
ராஜ்ஜியத்தில் 
ரொட்டி துண்டுகளுக்காய் 
ரத்தம் சிந்தும் தமிழர்கள் 
கொக்கி முள் பழங்களாய்..!

விடியலுக்காய் காத்திருக்கும் 
மரத் தோணிகளில் 
சல்லடையிட்ட குண்டுகளில் 
மரத் துகளோடு 
கொஞ்சம் 
தமிழ் மாமிசமும்...!

கருவறைகளை 
கிழித்தெறியும் 
ஹிட்லர் தனத்தை 
இன்றோடு விட்டுவிடு..
உன் மக்களை 
உலகம் சுற்றும் 
அகதிகளாக்காதே..!

சொந்த நாட்டையே 
கல்லறைத் தோட்டமாய் 
கட்டிவிட உத்தேசிக்கும் 
வெட்டியானுக்கு பெயர் 
அரசாங்கமா..?

ரத்த வெறியாட்டம் 
இன்னும் ஓயவில்லை 
ஈழ சுதந்திரமே 
உன் விலை என்ன..?