
தாகத் தீ
காத்திருந்து வாங்கினர்
கொள்கலனடைந்த
வெடிக்கும் தீயை.
உரசலின் நெருப்பில்
தகித்த
மூங்கில்காட்டுக்கு
அவசியப்படவில்லை
சிக்கி முக்கி கல்..!
காலவெளி
பெருநெருப்பை
மூடிவைத்தனர்
மூச்சுக்காற்றில்..!
அடுக்குமாடி குடியிருப்புகள்
ஆலாய் பறந்தன
அசுரப் பசி தாகத்தில்
பச்சைக் கீரையின்
கொள்ளை விலையில்
பசி தீர்த்தன
கலோரி மாத்திரைகள்
நீர்க் குழாயில்
வழிகிறது
வெள்ளை தங்கம்
நீர் வேண்டி
கைபேசி வழியலறும்
தாகம் தோய்ந்த
வீடுகளின் நாவுகள்..!
சூரியனைப் பிட்டு
வெப்பம் விற்கும்
அணுமின் மனிதன்.
பறக்கும் தட்டுகள்
கொள்ளையிடக்கூடும்
நிலவிலுறையும் பனியை..
கிரகவாசல்தோறும்
அழைப்புமணியழுத்த
முண்டியடிக்கும்
மனிதவிரல்களின்
ரேகை குவியல்.
மின்கலன் சுமந்த
என்னிதயத்தில்
வெட்டவெளியாய்
பற்றி எரிந்தது
தாகத்தின் தீ...!
விதிவெல்லும்
அறிவால்
உருவாக்கவியலாது
நதிகளை..!
No comments:
Post a Comment