
கழுவிச் செல்லும் மழை.
கழுகுகளின் மாமிச அலகுகளையும்
அன்று பிறந்த
அதன் குஞ்சுகளையும்
காய்ந்த சுள்ளிகளின்
திறந்த வெளி வீட்டையும்
கழுவி செல்லும் மழை.
ஆடையுதிர்த்த மரங்களின்
சருகுகளை
தன் அமானுஷ்ய விரல்களால்
களைந்து காற்றிலடித்து
மரங்களின் முண்டுகள் தடவி
வழிந்தோடியது மழை
வானைத் துளாவிய
ஒற்றடை குச்சிகளின்
நுனிகளெங்கும்
ஒரே இரவில்
பச்சை துளிர்களின்
மருதாணிப் பதியல்.
மழைப் புள்ளிகளின்
முத்த மழையில்
ஆண்டுகளின் அழுக்கு
கழுவப்பட்டு வீதியெங்கும்
காலடி கோலங்கள்.
குழைய குழைய
செம்மண்ணோடு
மேகமழையில்
சர்க்கரை பாகு.
கல்லுக்குள் புதைந்த
தேரைகளின் காட்டில் மழை
கல்யாண களையோடு
இரவெல்லாம் கச்சேரி.
ஓடி வந்த
நீருக்கு வீட்டை
தந்து விட்டு
திண்னையில்
ஒண்டியிருக்கும்..
நானும் என் கவிதையும்
எண்ணத்தூரிகை என்ற உங்கள் வலைப்பூவின் பெயர் தான் இணையதள நண்பர்களுக்கு தெரிகிறது. உங்களுடைய இனிய பெயரையும் தெரிவிக்கவும்.
ReplyDeleteஅன்புடன் என் சுரேஷ்