Saturday, March 7, 2009

சுதந்திரமே உன் விலை என்ன..?


நீ..
மூச்சுமுட்டி
அமிழ்ந்து போ..
தினம் தினம் 
கந்தக நெடியில் 
ஒருமுறையாவது 
சுதந்திரம் பற்றி பேசவிடு
என் அண்டைதேசமே..!

நீ அங்கே உயிருக்காய் 
பதுங்கு குழியில் 
பதுங்கும்போது 
நான் இங்கு 
நட்சத்திர ஓட்டலில் 
பீட்சா பற்றி 
யோசிக்க முடியவில்லை..!

தமிழ் பேசிய உதடுகள் 
உறித்தெடுக்கப்படும் என்றால்..,
உங்களின் சிம்மாசனம் 
தமிழனின் எலும்புகளால் 
அழகூட்டப்பட்ட 
பிணமேடு..!

நிர்வாணப் பிணங்கள் 
தமிழ் பேசிய 
பிணம் என்றால் 
கொத்தி தின்னும் கழுகுகளின் 
அலகுகளில் 
புத்தரின் போதனை எதற்கு..?

இனவெறியை 
பச்சயமாக்கிய 
சப்பாத்திக்கள்ளிகளின்
ராஜ்ஜியத்தில் 
ரொட்டி துண்டுகளுக்காய் 
ரத்தம் சிந்தும் தமிழர்கள் 
கொக்கி முள் பழங்களாய்..!

விடியலுக்காய் காத்திருக்கும் 
மரத் தோணிகளில் 
சல்லடையிட்ட குண்டுகளில் 
மரத் துகளோடு 
கொஞ்சம் 
தமிழ் மாமிசமும்...!

கருவறைகளை 
கிழித்தெறியும் 
ஹிட்லர் தனத்தை 
இன்றோடு விட்டுவிடு..
உன் மக்களை 
உலகம் சுற்றும் 
அகதிகளாக்காதே..!

சொந்த நாட்டையே 
கல்லறைத் தோட்டமாய் 
கட்டிவிட உத்தேசிக்கும் 
வெட்டியானுக்கு பெயர் 
அரசாங்கமா..?

ரத்த வெறியாட்டம் 
இன்னும் ஓயவில்லை 
ஈழ சுதந்திரமே 
உன் விலை என்ன..?

No comments:

Post a Comment