Monday, April 13, 2009

மரவீடுகளின் ஜன்னல்.


மரத்தின்

கூடுகைக்கீழ்

குவிந்துக்கிடக்கும்

தர்பூசணிகளில்

ஒரு துண்டையும்

சுவைக்க இயலாத

காகிதம் சேகரிக்கும்

சிறுவனின்...

நிராசை பற்றி.

வேகங்களில் விரையும் 

அசையா நகரத்தின்

பயணக் குறிப்புகளை

நரம்புகள் தகிக்கும் 

இலை நறுக்குகளில்

காம்புகள் அவிழும்

நொடிகளுக்குள்

பதிவு செய்தது கானல்.

காதறுந்த

பாதஅணிகளின்

கடைவிரித்தலில்

தோல்துளைக்கும்

வெம்மை கடந்து

பரதன் போல்

வீற்றிருந்தான்

பாதுகைகள் பற்றி

வாழ்வன் பசியூடே.

குளிரூட்டப்பட்ட

வண்ணம் பொதிந்த

பனிக் கூழ்

விற்பவனுக்கும்

தாயின் கைபிடித்த

குழந்தைக்கும் 

இடையே கரைகிறது

சங்கேத மொழியின் 

அழைப்பின் ஜில்லிப்பு.

அலகால் கொத்தியுண்ண  

இயலாத அரிசியின்

சீரான ஒழுகலை

தடுக்க இயலாத 

இறக்கையமர்த்தி 

விரையும் வாகனங்களில்

பயணிக்கிறது பசி.

கற்பனைப் பசுமையை 

மெழுகு வண்ணங்களின்

தீற்றலில் கண்டது,

தென்னைமரத்தையே 

கைகளில் தாங்கும்

பாவனையுடன் 

இளநீர் அருந்துகிறது 

மழலையின் கண்கள்.

ஆள் அரவமற்ற 

தெரு முனைச்சந்தை

நேருக்கு நேர் 

கடந்த பின்னும்

தர இயலாத 

கணங்களின் வேர்வையில்

கசிந்தொழுகும்

முதல் காதல் கடிதமும் 

அவளின் ஆடைக்கேற்ற

ரோஜாவின் வாசமும்.

கரிய சிறகுகளை

தீய்ந்தொழிக்கும்

தார்ச்சாலையின் 

நீள் பரப்பில் 

பிராவகமாய்

கானல் நீர்.

வறண்ட அலகுகளில்

நனைந்தூறும் 

ஆளரவமற்ற வளைவுகளில் 

நீர்க்குழாய்களின் 

சொட்டு நீர்க்கசியல்.

அலகுகள் கீறிச்செல்லும் 

நினைவுகளுக்கப்பால்

காதலின் பசியோடு 

அசையும் மரவீட்டின் 

கிளையின் மாடங்களில் 

தலை சாய்த்துப்பார்க்காத 

அவளின் ஒற்றைப்பார்வைக்காய்.

No comments:

Post a Comment