
யாருமறியாத
கருக்கலில்
முகமிழந்த நாம்,
சொல்லப்படாத
வார்த்தைகளுக்காய்
மெளனம் பகிர்ந்தோம்.
அடைபட்ட துயிலின்
முற்றங்களில்
நிலாவின் ஒளியருந்தி,
உன்னில் நானும்
என்னில் நீயும்
மொட்டவிழ்ந்த
அன்பின் நீர் தழும்பலில்,
கண்களில் பூத்தது
ஒளியின் பிரவாகம்.
நம் கனவுகளின்
ஏகாந்த பிரதிமைகளை
ஏற்காத உதிரச்சாயல்களின்
மனச்சுழிவுகளில்,
சோபையிழந்து
நீரின் எதிரெதிர்க் கரைகளில்
வேரறுந்தோம்.
உன் விவாதங்களின்
பொய்பிம்பகுகைகளில்
ஆதிகால மனுஷியாய்,
மொழியடங்கய
மெளனத்தின் குரல்வளை
நீண்டு மெலிந்ததண்டுகளாய்.
என்றேனும்
நீ உணரக் கூடும்
நம் சாயலில் ஒளிரும்
பூவின் இதழ் தொட்டு
பிரகாசிக்கும்
நிலாத்துண்டங்களை!