
தானியம் நிறைந்த
மச்சுவீட்டில்
காலைவேளை
சந்திப்புகளில்
நுரைக்கக் கிடைத்தது
கருப்பட்டிக்காப்பி.
முகம் தெரியாத
மாலைத் தீற்றல்களில்
அப்பாவுக்குத் தெரியாமல்
கூடி அருந்தின
தேநீர் இனித்தது
திண்ணைக்கடைகளில்
நட்பின் பாலோடு.
நீள் சாலையின் முடிவில்
குறிப்பிட்ட அந்த
தேநீர் கபேதான்
இலக்கியம் வளர்த்தது
அன்றைய பொழுதின்
பசி தீர்த்த
நுரை ததும்பும்
நாயரின் டீ.
இரவுப்பொழுதின்
நீண்ட பயணங்களில்
அதிரும் கானாபாடல்களின்
பொருள் விளங்குமுன்
கூடி அருந்தினோம்
ஒரே பேருந்தில்
பயணிக்கும் பொருட்டு .
மழைக்கால பயணத்தின்
குளிரூட்டும் சாரல்களில்
ஆவி பறக்கும் அனலிடை
சுக்கின் மணம் சுமந்து
சுறுசுறுப்பாய் இயங்கும்
காளான் குடை
வெதுப்பகம்.
பணியின் நலன் கருதி
குவிக்கப்பட்ட
அரசு ஆணைகளின்
பிரதிகளின் நடுவே
தேடி வருகறது தேநீர்,
இன்றே கையொப்பம் வேண்டி.
இப்போதெல்லாம்
நடைபாதையினூடே
அவசர கதியில்
மிதிவண்டியில் பயணிக்கும்
வெதுப்பகத்தில்
அருந்துகிறோம் தேநீர்
இணையதள முகவரி
கைமாறும் நிமிடங்களில்.
கசப்பின் சுவையூடே
விவாகப் பத்திரிகையுடனான
அவளின் இறுதி சந்திப்பில்
நீண்ட கனவு முடிவுற்றதில்
வார்த்தைகளற்ற மெளனியாய்
உலகின் முற்று பெறாத
புள்ளியாய் நான்.
No comments:
Post a Comment