
கருவறை வாசம் முடிந்து
கண் திறந்ததும்
நுழைந்தது இது .
என் இமைக்கூட்டில
இருப்பது தெரியாமல்
கனவுலகப் புள்ளிகளில்
பால் மணம் மாறாமல்
புன்னகை புரிந்தேன் .
கடவுள் பேசுகிறார்
என்றார் சிலர்
தத்தி தத்தி
முற்றம் நடந்த நான்
இலை நழுவும்
ஒளிக்கற்றையை
கையில் பற்ற
எத்தனித்தேன்
அகிலத்தின் அணுக்கள்
குழைந்தோடும்
ஓலைக்கீற்றின் ஓட்டைவழி
இறுகப் பற்றியும்
பிடிக்க இயலாத
ஒளிவட்டம் தேடி
அரும்பும் இளமையில்
எதிர்படுபவர் கண்களில்
தேடினேன் அதை .
அறிமுகம் இல்லாத
முகத்தின் கண்களில்
மிளிர்ந்தது அது
அதுவே எனதென்று
பற்றி இழுத்து
எனதாக்க முயற்சித்தேன்
வண்ண வண்ண கனவுலகம் காட்டி
எம்பி குதித்த போது
உடைந்து நிறமிழந்து
காற்றுக்குமிழ் போலே
என் கனவின் மேல்அதிருப்தியுற்று
இழைந்தோடும் அதை
வால்முளைத்து
நீந்தக் கண்டேன்
வேடிக்கை பார்த்த
நீள்வட்ட நீர் பரப்பில
நீ வேண்டாம் என
போக்கு காட்டி
என் சாயலை ஒத்த
கண்கள் விழிப்படிமமானது,
புதிய கனவொன்றின்
ஒளிபற்றி.
இனி அது நமதல்ல என
பெருமூச்செய்திய தருணத்தில்
வழக்கத்தின் காரணமாய்
அருவமாய் இமைக்குள்
சிறகுகள் மடித்து
மணலாய் நெருடிற்று
கண்ணின் கருவட்டம்
நீரின் நிழலில்
அதன் பின்னே அலைந்தது .
பேச மொழியின்றி
பசிய நீரின் ஆழம் துளைத்து
ஒளித்தூண்டிலின்
கரைவந்து
அது எனதல்லவென
மெய்யுணர்ந்தபோது
நானே நட்சத்திர ஒளியானேன்
உடம்பொடு மெய் நீங்கி.
No comments:
Post a Comment